எல்லா தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால் எப்படி தகுதியை நிர்ணயிக்க முடியும் ? : முதல்வர் பழனிசாமி கருத்து
தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை தலைவாசலில் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.மேலும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தவறு செய்தவர்கள் மீது டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் முதல்வர் பழனிசாமி பேட்டியில் கூறியது குறிப்புக்களாக பின்வருமாறு,
*டிஎன்பிஎஸ்சி ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் நடந்திருக்கும் முறைகேடு குறித்து விசாரணை நடைபெறுகிறது.
*தேர்வு முறைகேட்டில் யார் தவறு செய்திருந்தாலும் டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுக்கும்.
*எல்லா தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால் எப்படி தகுதியை நிர்ணயிக்க முடியும்
*தேர்வுகளை ரத்து செய்துவிட்டால் மாணவர்கள் உள்நாட்டில் தான் இருக்க வேண்டும்.
*தேர்வு முறைகேட்டில் யார் ஈடுபட்டு இருந்தாலும் டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
*சிஏஏவுக்கு எதிராக ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் நடத்துவது அவரது விருப்பம்.
*காலணியில் இருந்த குச்சியை எடுக்க முடியாததால் சிறுவனை அழைத்துள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
*இந்து பயங்கரவாதம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல. அவரது சொந்த கருத்து.
*நடப்பாண்டில் நன்றாக மழை பெய்துள்ளதால் தமிழகத்தில் வறட்சி என்பதே இல்லை.
*பள்ளி மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது
11-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (பிப்.8) முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், சிபிஐ விசாரணை வேண்டுமென்றும் கோரிக்கை வந்து கொண்டிருக்கின்றதே?
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு, அதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்குண்டான பணிகளை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டுக்கு அரசு உடந்தையாக உள்ளதா.....
எப்படி உடந்தையாக இருக்கின்றோம் என்று சொன்னால்தானே தெரியும். அதிமுக அரசைப் பொறுத்தவரைக்கும், நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதனால் அதில் தலையிடவில்லை. மேலும், தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருக்கின்ற காரணத்தினாலே அதில் நடைபெற்றுள்ள தவறினை அறிவதற்கு அந்த அமைப்பு உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று காவல் துறைக்கு புகார் செய்து, காவல் துறையும் விசாரணை மேற்கொண்டு, தவறில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திமுக கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருக்கின்றதே ? அது அவர்களுடைய விருப்பம்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்துத்துவா அமைப்பைப் போல செயல்படுகிறார் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் சொல்லியிருக்கின்றனரே? அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் நீலகிரி வந்தபொழுது மாணவனை செருப்பு கழற்ற சொன்னது குறித்து...
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயது முதிர்ந்தவர், அவருக்கு சுமார் 70 வயதாகின்றது. அவர், அணிந்திருந்த செருப்புக்கும் காலுக்கும் இடையே மாட்டிக்கொண்ட குச்சியை குனிந்து எடுக்க முடியவில்லை, அதனால், அருகாமையில் இருந்த சிறுவனை அழைத்து அதை எடுக்கச் சொல்லியிருக்கின்றார், அதை அவர் தெளிவாகத் தெரிவித்ததுடன் அதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார். மேலும், பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்திருக்கின்றார். அந்த சிறுவன் என்னுடைய பேரன் போல் இருக்கின்றார், உதவிக்குத் தான் அழைத்தேன் என்று தெரிவித்திருக்கின்றார். ஆனால், அதை பெரிதுபடுத்திப் பேசுகின்றார்கள். அதிமுக அமைச்சர்களோ அல்லது நிர்வாகிகளோ, எவரும் அப்படிப்பட்ட செயலில் ஈடுபடமாட்டார்கள்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு என்று எனக்குத் தெரியவில்லை. அவர் பக்திமான், அது நன்றாகத் தெரியும். அவர், அவருடைய சொந்தக் கருத்தைச் சொல்லியிருக்கலாம், அது, அதிமுகவின் கருத்தல்ல என்பதையும் அமைச்சர் ஜெயக்குமார் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.
கோடைக்காலம் தொடங்கவுள்ளதால், வறட்சியை சமாளிக்க எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றீர்கள்?
வறட்சி என்ற சொல்லே இந்த வருடம் இல்லை. கோயம்புத்தூர் பகுதிகளைச் சுற்றி நல்ல மழை பொழிந்துள்ளது, நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி காட்சியளிக்கின்றது.
ஒன்பதாவது மற்றும் பதினொன்றாவது வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா?
அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால் அந்த மாணவனின் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது? அப்படிச் செய்தால் மாணவர்கள் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடும். தேர்வு வைத்தால் தான், அந்த மாணவனின் தகுதியை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்துகொள்ள முடியும். பெற்றோருடைய கோரிக்கையை ஏற்று ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் ரத்து செய்திருக்கிறார்கள்.
இடைநிற்றல் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றனரே?
இடைநிற்றல் குறித்த புள்ளிவிவரங்களை எவரும் தெரிவிக்கவில்லையே! அவ்வாறு பேசுவது உண்மையல்ல, இடைநிற்றலைத் தவிர்ப்பதற்கு அரசால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.