மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் விரைவில் லாக்கர் வசதி
மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் மேற்கு வங்கத்தில் லாக்கர் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக மாநிலக் கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கூறும்போது, ''மாநிலத்தில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் விரைவில் லாக்கர் வசதி செய்து தரப்பட உள்ளது. வகுப்பறைகளில் லாக்கர்களைப் பொருத்திய பிறகு மாணவர்கள் தங்களின் புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்களை அவற்றில் வைத்துவிடலாம். ஒவ்வொரு நாளும் மாணவர்கள், பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று அவற்றைத் திரும்பவும் கொண்டு வர வேண்டியதில்லை. இதன் மூலம் மழலையர் பள்ளி முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் புத்தகச் சுமை குறையும்.
எனினும் நிதிப் பற்றாக்குறை காரணமாக இத்திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்க முடியாது. இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1.5 கோடி மாணவர்கள் பயன்பெறுவர்'' என்று தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே நகரத்தை ஒட்டிய பள்ளிகளில் லாக்கர் வசதி செய்யப்பட்டு விட்டதாகத் தெரிவித்தனர். ஜாதவ்பூர் வித்யாபீட தலைமை ஆசிரியர் லாக்கர் வசதி குறித்துக் கூறும்போது, ''இது உண்மையிலேயே நல்ல திட்டம். எனினும் நிதி ஒதுக்கல் உள்ளிட்ட திட்ட மதிப்பீடுகளில் நிலையான வரையறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்'' என்றார்.