Breaking News

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல்

     அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இம் மாதம் முதல் கட்டாயம் ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் சம்பள பட்டியல் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்தந்த துறை மூலம் சம்பள பட்டியல் பெறப்பட்டு, மாவட்ட கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தற்போது முற்றிலும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டது. இதற்கென ஐஎப்எச்ஆர்எம்எஸ் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஐஎப்எச்ஆர்எம்எஸ் நடைமுறை வரும் ஏப்ரல் முதல் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, சேலம், ஈரோடு, நெல்லை உள்பட சில மாவட்டங்களில் நடப்பு மாதம் முதலே, ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் மட்டுமே சம்பள பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. பல இடங்களில் சர்வர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், பட்டியல் அனுப்புவது தடைபட்டுள்ளது. இதனால், நடப்பு மாதம் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

     இது குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கூறியதாவது: தற்போது, அளிக்கப்பட்டுள்ள சாப்ட்வேரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்தால், சர்வர் தாமதமாவதுடன், ஏற்றுக்கொள்ளாமல் டெலிட் ஆகிறது. பல துறையில் உள்ள அலுவலர்களுக்கு ஐஎப்எச்ஆர்எம்எஸ் பதிவேற்றம் குறித்து எந்தவித பயிற்சியும் முழுமையாக அளிக்கப்படவில்லை. மாவட்ட கருவூலத்தில் நேரில் சென்று கேட்டால், அங்குள்ள விப்ரோ பணியாளர்கள், இதை இங்கு சரிசெய்ய முடியாதுஎன சாதாரணமாக கூறுகின்றனர். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் இருக்கும் போது, சம்பள பட்டியலை ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் போட்டவர்களுக்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பது வேதனை அளிக்கிறது. ஒவ்வொரு மாதமும் அதிகபட்சம் 25ம் தேதிக்குள் சம்பள பட்டியல் அனுப்பப்பட்டு விடும்.

      சர்வர் பிரச்னையால், நடப்பு மாதத்திற்கு இதுவரை பட்டியல் முழுமையாக தயாராகவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பாவங்க நாங்க... வாட்ஸ் அப்பில் புலம்பல்

       ஐஎப்எச்ஆர்எம்எஸ் சம்பள பட்டியல் விவகாரம் தொடர்பாக, பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் வேதனை தெரிவித்து, வாட்ஸ் அப் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், ‘‘ மேலதிகாரிகளே, மிக்க மகிழ்ச்சி. 24x7 பணிபுரிய நாங்கள் தயார், Wipro விடம் Software தயாரா என கேட்டீர்களா? உங்க உதவாக்கரை சர்வரால், இன்னிக்கு என்ன வேலை நடந்தது? பாவங்க நாங்க. முழுமையாக முடிக்காத ஒரு சர்வரை வைத்துக் கொண்டு, அப்பாவி அரசு ஊழியர்களை திட்டும் அதிகாரிகளே, உங்களால் ஒருவருக்காவது பில் போட்டு காட்ட முடியுமா? என குறிப்பிடப்பட்டுள்ளது.