முதன்மை கல்வி அலுவலரின் போலி முத்திரையை பயன்படுத்தி பள்ளிகளுக்கு அங்கீகாரம்
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு என அரசு சார்பில் பிரத்யேக அலுவலக முத்திரை வழங்கப்பட்டுள்ளது. இது பள்ளிக்கல்வித்துறையின் அலுவலக கோப்புகள், பள்ளிகளுக்கான தேர்வுகள், ஆசிரியர்களுக்கான ஆணைகள் மற்றும் பள்ளி அங்கீகாரம் தொடர்பான அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஒரிஜினல் முத்திரையை போல் போலி முத்திரை ஒன்று இருப்பது சிக்கியுள்ளது.
இந்த போலி முத்திரை கருப்பு நிறத்தில் மரத்தாலானது. இதனை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தி வந்துள்ளனர். ஆங்கில எழுத்தில் சீல் உள்ளது. தற்போது, இதுபோன்ற முத்திரை பயன்பாட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய முத்திரை நீல நிறத்தில் தமிழ் எழுத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பயன்பாட்டில் இல்லாத போலி முத்திரையை எஸ்.எஸ்.குளம் மாவட்ட கல்வி அதிகாரி பல தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கவும், மேலும் பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தி உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் வந்துள்ளது. மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரியின் வாகனத்தில் இருந்து தற்போது போலி முத்திரையை கல்வித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.
இவர், கடந்த பல வருடங்களுக்கு முன்பு கோவை மெட்ரிக் பள்ளி ஆய்வாளராக இருந்தார். அப்போது, இந்த முத்திரை பயன்பாட்டில் இருந்து இருக்கலாம் எனவும், அதனை திருப்பி தராமல் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முயற்சி எடுத்து வருகிறார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியில் இருந்து அய்யண்ணன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய முதன்மை கல்வி அதிகாரி வந்தவுடன் போலி முத்திரை தொடர்பான விசாரணை சூடுபிடிக்கும் என தெரிகிறது. போலி முத்திரையை பயன்படுத்தி நடந்த மோசடி கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.