Breaking News

9 ஆண்டாக பணியாற்றி வரும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்களா?

     கடந்த 9 ஆண்டுகளாக பள்ளிகளில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், இந்த ஆண்டாவது ஊதிய உயர்வுடன் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த 2012ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது, பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்கல்வி என தொழிற்கல்வி, திறன்சார்ந்த கல்வி பாடங்களுக்கு 16 ஆயிரத்து 549 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் 9வது ஆண்டாக தொடர்ந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2 முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு, தற்போது ரூ.7,700 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. மரணம், குறைந்த மாத ஊதியம் காரணமாக பணியை விட்டவர்கள் என்று பல்வேறு காரணங்களால் ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் கழிந்து தற்போது 12 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

     இந்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பணி சம்பந்தமான பிரச்னைகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை. தங்கள் விஷயத்தில் அரசு மெத்தனம் காட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். முதல்வரின் 110 விதி அறிவிப்பின்படி மே மாதம் சம்பளம், பணி நியமன அரசாணை 177ன்படி 4 பள்ளிகளில் வேலை, இறந்தவர் குடும்பங்களுக்கும் மற்றும் ஓய்வு பெற்று சென்றவர்களுக்கும் ரூ.3 லட்சம் குடும்ப நலநிதி, ஆசிரியைகளுக்கு பேறுகால விடுப்பு, 7வது ஊதியக்குழு ஆணைப்படி 30 சதவீத ஊதியஉயர்வு, பணி மாறுதல் போன்ற கோரிக்கைகளை தொடர்ந்து அரசிடம் விடுத்து வந்தாலும் அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

     இதுதவிர 2017 ஜூன், ஜூலை மாதங்களில் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். இதுதொடர்பாக பரிசீலித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய குழு 3 மாதங்களுக்குள் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் கல்வி அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் 2 ஆண்டுகள் கடந்தும் அது வெறும் அறிவிப்பாகவே உள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில் இவர்களுக்கு முன்பே நியமிக்கப்பட்ட பகுதி நேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் பின்னர் கல்வித்துறையில் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். பகுதிநேர எழுத்தர்களும் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் பல துறைகளிலும் பகுதிநேர ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதுபோலவே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களான எங்களையும் ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கேட்டு அரசுக்கும், துறை அமைச்சருக்கும் மனு அனுப்பியும் எந்த பலனுமில்லை. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் தங்களுக்கு சாதகமான அறிவிப்பை அரசு வெளியிடும் என்ற எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘தமிழக பட்ஜெட் தயாரிப்புப்பணிகளில் அரசின் நிதித்துறை ஈடுபட்டுள்ளது. இதில் அரசு பள்ளிகளில் பகுதி நேரமாக பணிபுரிந்து வரும் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் செய்வதற்கான முடிவை எடுப்பதற்கு இறுதி வடிவம் கொடுக்க வேண்டும்.

  இதற்காக நாங்கள் கவர்னர், முதல்வர், நிதியமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பலருக்கும் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளோம். நிர்வாக வசதிக்காக 9 புதிய மாவட்டங்களை அரசு தோற்றுவித்துள்ளது. இம்மாவட்டங்களுக்கான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட துறை அலுவலகம், புதிய பணியிடங்கள் என உருவாக்கப்பட்டு பல்லாயிரம் கோடிகள் செலவிடப்படுகிறது. இந்த நிலையில் பல ஆண்டுகளாக தள்ளாடி வரும் எங்களுக்கு ஆண்டுக்கு ₹200 கோடி மட்டுமே கூடுதலாக நிதியை ஒதுக்கி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

%25282%2529