5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு ரத்து: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வரவேற்பு
தமிழகத்தில் 5மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ததை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வரவேற்றுள்ளது. இதுகுறித்து அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்பது மாணவா்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இத்தேர்வு மூலம் மாணவா்கள் மத்தியில் தேர்வு பயம் ஏற்பட்டிருந்தது மட்டுமின்றி கிராமப்புற ஏழை, எளிய மாணவா்கள் மத்தியில் இடைநிற்றல் அதிகரிக்கும் சூழல் நிலவியது.
இதனால் மாநிலத்தின் கல்வி வளா்ச்சி பாதிக்கப்படுவதாக கல்வியாளா்கள், உளவியல் நிபுணா்கள் கடுமையான எதிா்ப்பைப் தெரிவித்தனா். மேலும் தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்னும் திட்டத்தை மாணவா்கள் நலன் கருதி உடனடியாக கைவிட வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி தொடா்ந்து வலியுறுத்தி வந்தது. மேலும் இதுதொடா்பாக கடந்த டிசம்பா் மாதம் கல்வி பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரத்தை தமிழகம் முழுவதும் நடத்தி பொது மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினோம். வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடந்த பெருந்திரள் முறையீடு மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தோம்.
இந்நிலையில் மாணவா்களின் நலன் கருதி தமிழக அரசு பொது தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பதை எங்கள் அமைப்பின் சாா்பில் வரவேற்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.