Breaking News

பொறியியல் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை: ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி அறிவிப்பு

    சென்னை: பொறியியல் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்று ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இதுவரை இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் அதேபோன்று கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த பாடங்களை படித்திருந்தால் தான் பொறியியல் படிப்பில் சேர முடியும் என்ற விதிமுறை ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது.

   இந்த சூழலில் நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளுக்கான விதிமுறைகளை வகுத்து செயல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பான டெல்லியில் இருக்கக்கூடிய ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு என்ற அமைப்பு பொறியியல் படிப்பில் சேருவதற்கான விதிமுறைகளை வெளியிடுகிறது. அந்த விதிமுறைகளில் தான் இத்தகைய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 12ம் வகுப்பு முடித்து பொறியியல் படிப்பில் சேர்வதற்கு வேதியியல் பாடம் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நாடு முழுவதும் இருக்கக்கூடிய பொறியியல் கல்லூரிகளுக்கு தற்போது சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு வருகிறது.

   இந்த தகவல் மாணவர்கள் மத்தியில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மாணவர்கள் இயற்பியல், உயிரியல், கணிதம் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் படித்திருந்தால் போதும். அதுவே பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தகுதியை பெறுகின்றனர். வேதியியல் பாடம் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. படித்திருந்தாலும் தவறில்லை என்பது தான் ஏ.ஐ.சி.டி.இ.-யின் தகவலாக இருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பானது இந்த ஆண்டே அமலுக்கு வருகிறது. 12ம் வகுப்பு தேர்வு முடிவுக்கு பிறகு பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை நடைபெறவிருக்கிறது.

       எனவே 12ம் வகுப்பில் வேதியியல் படிக்காத மாணவர்கள் கூட பொறியியல் படிப்பில் சேரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மாணவர்களில் ஒரு சிலர் மகிழ்ச்சியும், ஒரு சிலர் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.