Breaking News

டி.என்.பி.எஸ்.சி குரூப் - 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தற்போது புதிய புகார்

    கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் - 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தற்போது புதிய புகார் எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. அந்த விசாரணையின் தொடர்ச்சியாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக கண்டறியப்பட்டு அதற்கு தனியாக வழக்குப் பதிந்து விசாரணைநடக்கிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் - 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தற்போது புதிய புகார் எழுந்துள்ளது. அந்த தேர்வில் வெற்றி பெற்று வணிக வரித்துறையில் பணியில் சேர்ந்த 117 பேரில் 60 க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் என்று தற்போது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  புகாரின் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள்ளது. முன்னதாக 2012-ஆம் ஆண்டு முதலில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் - 2 தேர்வில் கடலூர், விழுப்புரம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கேள்வித்தாள் வெளியானதாக எழுந்த புகாரை அடுத்து மறுதேர்வு நடத்தப்பட்டது. அவ்வாறு நடத்தபட்ட மறுதேர்வில்தான் தற்போது முறைகேடு புகார்கள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.