பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியஉயர்வு - பணிநிரந்தரம் குறித்து 110-வது விதியில் முதல்வர் அறிவிக்க கோரிக்கை
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியஉயர்வு - பணிநிரந்தரம் குறித்து 110-வது விதியில் முதல்வர் அறிவிக்க கோரிக்கை!
பகுதிநேர ஆசிரியர்களின்
ஊதியஉயர்வு - பணிநிரந்தரம் குறித்து 110-வது விதியில் முதல்வர் அறிவிப்பு
வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில
ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கருணை
மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் மறைந்த தமிழக முதல்வர்
ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு 2012-ம் ஆண்டு 16549 பகுதிநேர ஆசிரியர்கள்
ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை
தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன்கல்வி பாடங்களை நடத்திட
அனைவருக்கும் கல்வி இயக்க நிதியை பெற்று பள்ளிக்கல்வித்துறை மூலம்
நியமனம் செய்யப்பட்டோம்.
கடந்த 8 ஆண்டுகளில் ரூ.2ஆயிரத்து 700 மட்டுமே ஊதியஉயர்வு
வழங்கப்பட்டுள்ளது.இதனால் 9-வது ஆண்டாக பணிபுரியும் எங்களுக்கு தற்போது
தரப்படும் சம்பளம் ரூ.7ஆயிரத்து 700 தினக்கூலியைவிட குறைவானது.
வருடாந்திர சம்பளஉயர்வு 10 சதவீதம் தரப்பட்டிருந்தால் சம்பளம்
ரூ.10ஆயிரம் எப்போதே கிடைத்திருக்கும்.
16549 பேரில் 5 ஆயிரம் காலிப்பணியிடங்களின் நிதியை தற்போது பணிபுரிந்து
வரும் 12ஆயிரம் பேருக்கு பகிர்ந்து வழங்கினாலே ரூ.11ஆயிரம்வரை
வழங்கமுடியும்.
இதனுடன் 7-வது ஊதியக்குழு 30 சதவீதம் ஊதியஉயர்வை அமுல்செய்தால்
ரூ.15ஆயிரம் வரை அரசு வழங்க வழி இருக்கிறது. எனவே விலைவாசி உயர்வுக்கேற்ப
எங்களுக்கு சம்பள உயர்வை தர அரசு முன்வரவேண்டும்.
9 ஆண்டுகளாக பணிபுரியும் எங்களை பணிநிரந்தரம் செய்யாததால் அரசின்
பணபலன்களை பெறமுடியாமலும், போனஸ், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ
காப்பீடு, பணி ஓய்வு மற்றும் இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின்
குடும்பங்களுக்கு குடும்பநலநிதி எதுவும் கிடைக்காமலும் வாழ்வாதாரத்தை
இழந்து வருகிறோம்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில் 10-வது கல்வியாண்டு
தொடங்கவுள்ள நிலையில் எங்களை பணிநிரந்தரம் செய்யாததால், மே மாதம் சம்பளம்
இதுவரை 8 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதால் அனைவருக்கும் ரூ.53ஆயிரம்வரை
இழந்து தவித்து வருகிறோம். எங்களுக்கான பணிநியமன ஆணையில் மே மாதம்
சம்பளம் கிடையாது என குறிப்பிடாத நிலையில் இதுபோன்ற நடவடிக்கை எங்களை
மேலும் பாதிக்கிறது.
வேலைநிறுத்த காலங்களில் அரசின் உத்தரவின்படி ஊதியம் எதுவுமின்றி
முழுநேரமும் பள்ளிகளை திறந்து பாடம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களுக்கு
அரசு சலுகைகளை செய்ய முன்வரவேண்டும் என எதிர்பார்த்து வருகிறோம்.
நாங்கள் நியமனம் செய்யப்பட்டதோடு 2-வது முறையாக ஆட்சி செய்யும் அதிமுக
அரசின் பட்ஜெட்டில் இதுவரை ஒருமுறைகூட பகுதிநேர ஆசிரியர்களுக்கு
சம்பளஉயர்வு மற்றும் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்புகள் வெளியிடாதது
எங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறது.
ஒன்று எங்களை பணிநிரந்தரம் செய்யுங்கள். இல்லையெனில் ரூ.18ஆயிரம்
குறைந்தபட்ச சம்பளத்தை கொடுங்கள் என்ற இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி
வருகிறோம்.
3 ஆண்டுக்குமேல் பணிபுரிந்த 16ஆயிரம் துப்புரவு பணியாளர்களை சிறப்பு
காலமுறையில் பணியமர்த்தும் அரசு, 9 ஆண்டுகளாக பாடம் நடத்தும் 12ஆயிரம்
பகுதிநேர ஆசிரியர்களையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த முன்வரவேண்டும்.
தற்போது எங்களுக்கு ரூ.7ஆயிரத்து 700 சம்பளம்தர அரசு ஆண்டுக்கு
ரூ.100கோடி செலவிடுகிறது. எங்களை இடைநிலை ஆசிரியர்கள் நிலையில்
பணியமர்த்தினால் அரசு மேலும் ரூ.250கோடி நிதிஒதுக்கினோலே போதும்.
எனவே இம்முறையாவது பட்ஜெட்டில் 110-ன் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட
வலியுறுத்தி கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.