37 ஆயிரம் விண்ணப்பத்தில் தவறு: CBI விசாரணை கோருவோம் என ஆசிரியர்கள் TRBக்கு எச்சரிக்கை!
37 ஆயிரம் விண்ணப்பத்தில் தவறு: CBI விசாரணை கோருவோம் என ஆசிரியர்கள் TRBக்கு எச்சரிக்கை!
உதவி பேராசிரியர் பதவிக்கான விண்ணப்பங்களில் 95 சதவீதம் பிழை உள்ளது என்று டிஆர்பி அறிவித்துள்ளதற்கு ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான விண்ணங்கள் அனைத்தும் இணைய தளம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து 39 ஆயிரம் பேர் தங்கள் விண்ணப்பங்களை இணைய தளம் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர். ஆனால் அந்த விண்ணப்பங்களில் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே முழுமையாக இருப்பதாகவும், மற்ற 37 ஆயிரம் விண்ணப்பங்கள் பிழையாக இருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்புக்கு அகில இந்திய தனியார் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கணக்கின்படி 5 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே முழுமையாக உள்ளது என்று தெரிவித்தால், அது ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் விண்ணப்பம் பெறும் முறையில் உள்ள குறைபாடு என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும். வெளிப்படை தன்மையுடன் இருக்கும் என்று தெரிவித்த ஆசிரியர் தேர்வு வாரியம், விண்ணப்பித்த ஆசிரியர்களை ஏமாற்ற முயற்சிப்பதாக தெரிகிறது. வந்துள்ள அனைத்து விண்ணப்பங்களையும் அட்டவணையிட்டு (Tubular Format) இணைய தளத்தில் வெளியிட வேண்டும். இல்லை என்றால் விண்ணப்பித்த அனைவரும் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியமே முரண்பாடாக ஒரு செய்தியை வெளியிட்டுவிட்டு இந்த பணி நியமனத்தில் முறைகேடுகள் நடக்க வழி ஏற்படுத்த முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுத்துகிறது. அதனால் நீதிமன்றம் செல்லும் போது சிபிஐ விசாரணை கேட்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.