பிளஸ் 2 தேர்வுக்குத் தயாரா? - கூடுதல் பாடப் பகுதிகளில் கூடுதல் கவனம்!
பிளஸ் 2 தேர்வுக்குத் தயாரா? - கூடுதல் பாடப் பகுதிகளில் கூடுதல் கவனம்!
பிளஸ் 2 தாவரவியல்
தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்
‘உயிரி-தாவரவியலு’டன் கூடுதலாக சில பாடப்பகுதிகள் சேர்ந்ததாக, பிளஸ் 2 ’தாவரவியல்’ அமைந்துள்ளது. இந்த கூடுதல் பகுதிகள் சுமையாக அல்லாது பாடக் கருத்துக்களை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் உள்ளன.
போட்டித் தேர்வுகளுக்கும் அடிப்படையான தாவரவியல் பாடங்களை ஈடுபாட்டுடன் படித்தால், தேர்வுக்கு அப்பாலும் அவை உதவிகரமாக அமையும்.
வினாத்தாள் அமைப்பு
தாவரவியல் பாடம் 70 மதிப்பெண்களுக்கானது. 15 ஒரு மதிப்பெண் வினாக்களுடன் வினாத்தாளின் முதல் பகுதி அமைந்துள்ளது. 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களுக்கான அடுத்த இரு பகுதிகள், தலா 9-லிருந்து தலா 6-க்கு பதிலளிப்பதாக அமைந்துள்ளன. இரண்டு பகுதிகளிலும் தலா ஒரு வினா கட்டாய வினாவாகும். 5 மதிப்பெண்களுக்கான நான்காம் பகுதியில் ’அல்லது’ வகையிலான 5 வினாக்கள் அமைந்துள்ளன.
வினாக்களின் நோக்கம்
பாடநூலின் வினாக்களில் இருந்தே வினாத்தாளின் பெரும்பகுதி அமையும் என்றபோதும், சுமார் 20 முதல் 40 சதவீத வினாக்கள் இதர வகைகளிலும் அமைந்திருக்கும். படைப்பு வினாக்கள், வேறுபாடுகள் மற்றும் ஒப்பீடு குறித்த வினாக்கள், வாழ்வியல் நடைமுறை சார்ந்த வினாக்கள், சுய சிந்தனையை ஊக்குவிப்பவை ஆகியவற்றுடன் கணக்கீடு, படங்கள், சோதனைகள் தொடர்பான வினாக்களாகவும் அவை அமைந்திருக்கும். இவை மட்டுமன்றி சொந்த நடையில் எழுதக்கோரும் வகையிலும் வினாக்கள் அமையலாம்.எ.கா: 1. இயற்கை வேளாண்மை சிறந்தது என எவ்வாறு நிருபிப்பாய்? 2. பசுமைப்புரட்சி வரமா, சாபமா?
பாடங்களில் கூடுதல் கவனம்
‘உயிரி-தாவரவியல்’ பாடங்களுடன், கூடுதலாய் சில பாடப்பகுதிகள் இணைந்ததாக ’தாவரவியல்’ அமைந்துள்ளது. சில பாடங்களில் மட்டுமே இடம்பெறும் கீழ்கண்ட கூடுதல் பாடப்பகுதிகளில் சற்று கூடுதல் கவனம் செலுத்துவது, வினாத்தாளின் 30 மதிப்பெண்களை குறிவைத்து தயாராவதற்கு உதவும்.
பாடம்-3 தாவரங்களில் DNA வளர்சிதை மாற்றம், தாவரங்களில் புரதச்சேர்க்கை, தாவும் மரபணுக்கள், மரபணு தொகையம்-அராபிடாப்சிஸ் தாலியானா(Arabidopsis thaliana).
பாடம்-7 பாறை வழிமுறை வளர்ச்சி, இந்திய காடுகளின் 16 வகைகள், தமிழக காடுகளின் வகைகள். நான்கு வகை தாவரத் தொகுப்புகள்.
பாடம்-8 தமிழ்நாட்டின் முக்கிய ஏரிகள், கழிவுநீர் வெளியேற்றம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மை.
பாடம்-9 விதை பாதுகாப்பு, விதை சேமிப்பு முறைகள்.
பாடம்-10 மக்காசோளம், கம்பு, சாமை, கொண்டைகடலை, உருளை, வெள்ளரி, வாழை, பலா, பாதாம், சர்க்கரை துளசி, தென்னை, தேயிலை, கோகோ, கருமிளகு, தேங்காய் நார்.
தோதகத்தி, கருங்காலி, ரோஜா, சந்தன மரம், ஆடாதோடை, காளான் வளர்ப்பு, திரவ கடற்களை உரம், கண்ணாடி தாவரப் பேணகம், மூலிகை மற்றும் நறுமணப் பயிர்களைப் பயிரிடுதல்.
சவாலை சமாளிப்போம்
பாடக் கருத்துகளின் பொருளுணர்ந்து படிப்பதும், வினாக்களுக்கான விடைகள் என்பதோடு மட்டுமன்றி அனைத்து பகுதிகளையும் முழுமையாக வாசித்து அறிவதும் ஒரு மதிப்பெண் பகுதிக்கு முழுமையாக விடையளிக்க உதவும். ஒரு மதிப்பெண் வினாக்கள், பொருத்துக, தவறான இணையை தேர்ந்தெடுத்தல், சரியான கூற்றை கண்டறிதல், சரியான வரிசையினை கண்டறிதல், கணக்கீடுகள், படங்களின் பாகங்களை கண்டறிதல், எடுத்துக்காட்டுகள், தாவரவியல் பெயர்கள் எனப் பல வகைகளில் அமைந்திருக்கும்.
பாடம் முழுமைக்கும் முக்கிய பாடக் கருத்துகளை அடையாளங்கண்டு அவற்றை அடிக்கோடிட்டு வைப்பது விரைவான திருப்புதலுக்கு உதவும். ’பத்து விழுக்காட்டு விதி, மறுகூட்டிணைவு நிகழ்விரைவு (RF)’ உள்ளிட்ட கணக்கீட்டு கேள்விகளையும் இப்பகுதியில் எதிர்பார்க்கலாம்.
வித்தியாச வினாக்கள்
2 மற்றும் 3 மதிப்பெண் பகுதி வினாக்களில் ’வரையறைகள், முக்கியத்துவம், பயன்கள், எடுத்துக்காட்டுகள், வகைகள், படங்கள்’உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் தந்து தயா ராக வேண்டும். இவற்றிலும் வித்தியாசமான பெயர்கள் மற்றும் உச்சரிப்பு கொண்டவை கேட்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எ.கா.: சிர்சினோட்ரோபஸ், டபீட்டம், பொலினியம், கேய்ட்டினோகேமி, அப்போமிக்ஸிஸ், பல்பண்புக்கூறு தன்மை, அயல்பன்மடியம், ஹாலிடே மாதிரி, TATA பேழை, நுனிமூடல், இடமாற்றுக்கூறுகள், pBR 322 பிளாஸ்மிட், RISC கூட்டமைப்பு, உயிரி வழித்திருத்தம், உறைகுளிர் பாதுகாப்பு (Cryo-preservation), வாழிடப் பேணுகை, புறவாழிடப்பேணுகை, ஆக்கிரமிப்பு தாவரங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை தந்து திருப்புதல் செய்வதுடன், எழுதிப் பார்ப்பதும் நல்லது.
முதலில் முடிப்போம்
5 மதிப்பெண் பகுதியில் 10 வினாக்கள் கேட்கப்படுகின்றன. இவை மொத்தமுள்ள 10 பாடங்களில் இருந்து தலா ஒரு வினா எதிர்பார்க்கலாம். இவற்றில் ’தனிப்பட்ட தாவரவியல்’ பகுதியிலிருந்து 3 முதல் 4 வினாக்களை எதிர்பார்க்கலாம். 5 மதிப்பெண் முக்கிய வினாக்களுக்கான பாடப்பகுதிகளை முதலில் முடிப்பது தாவரவியல் தேர்வுக்கு தயாராவதை எளிமையாக்கும். 1.கருவுறா இனப்பெருக்கம், 2.கருவூண் திசு, 3.ஆண்கேமிட்டக தாவரவளர்ச்சி, 4.பாலிகோணம் கருப்பையின் வளர்ச்சி, 5.ஒரைசா சட்டைவா விதையின் அமைப்பு, 6.சைட்டோபிளாச சார்ந்த பாரம்பரியம், 7.
ஓங்கு தன்மை மறைத்தல், 8.குறுக்கேற்றத்தின் செயல் முறை, 9.சடுதிமாற்ற வகைகள், 10.அயல்பன் மடியம், 11.அராபிடாப்சிஸ் தாலியானா சிறப்புகள், 12.RNA உருமாற்றத்தில் மூலக்கூறு செயல்முறை, 13.PBR 322, 14.உயிரி தொழில்நுட்பவியலின் பயன்பாடுகள், 15.திசு வளர்ப்பின் பயன்கள், 16.உவர்நில தாவரங்களின் தகவமைப்புகள், 17.வறண்ட நிலத்தாவர தகவமைப்புகள், 18.பத்து விழுக்காட்டு விதி, 19.பாறை வழிமுறை வளர்ச்சி, 20.பசுமை இல்ல விளைவு, 21.ஓசோன் குறைதல், 22.விதை பாதுகாப்பு முறைகள், 23.காளான் வளர்ப்பு, 24.இயற்கை வேளாண்மை, 25.SCP உற்பத்தி.
தேர்ச்சி நிச்சயம்
மெல்லக் கற்போர் முக்கியமான பாடப்பகுதிகளை குறிவைத்து அவற்றை மீண்டும் படிப்பதும் திருப்புதல் செய்வதும் முக்கியம். தேர்ச்சிக்கான தகுதியினை உறுதி செய்ததும்,கூடுதல் மதிப்பெண்களுக்காக இதர பாடப்பகுதிகளில் கவனம் செலுத்தலாம். கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பாடப் பகுதிகள்: பாரம்பரிய மரபியல், தாவர திசு வளர்ப்பு, சூழ்நிலை கோட்பாடுகள், சூழல் மண்டலம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், பொருளாதார பயனுள்ள தாவரங்கள் ஆகிய எளிமையான பாடங்கள்
- பாடக் குறிப்புகளை வழங்கியவர்: உ.காளிராஜன்,
முதுகலை பட்டதாரி ஆசிரியர் (தாவரவியல்),
அரசு ஆ.தி.ந. மேல்நிலைப்பள்ளி,
மீனம்பாக்கம்.
சென்னை.