மதிப்பெண் குறைந்ததால் மாணவர்கள் மீது கரியை பூசிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
அரியானாவில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. 6-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களும், 2 மாணவிகளும் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் வாங்கி இருக்கிறார்கள். இதனால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் 4 பேர் முகத்திலும் கரியை பூசி பள்ளிக்கூட வளாகத்தை சுற்றிவரச் செய்தனர். அவர்களில் தலித் சமூகத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் நடந்த சம்பவம் பற்றி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் செய்தனர். இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், தாழ்த்தப்படுத்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டமும் நடைபெற்றது.