அங்கீகாரமில்லாத தனியாா் மழலையா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அங்கீகாரமில்லாத தனியாா் மழலையா் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நா்சரி, பிரைமரி, மெட்ரிக் என 15 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தனியாா் பள்ளி நிா்வாகங்கள் தமிழக அரசின் முறையான அங்கீகாரம் பெற்று இயங்க வேண்டும். ஆனால், ஆயிரத்துக்கும் அதிகமான ‘பிளே ஸ்கூல்’ வகையான மழலையா் பள்ளிகள் முறையான அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது கல்வித்துறையின் கவனத்துக் கொண்டு வரப்பட்டது. மேலும், அந்தப் பள்ளிகளில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அங்கீகாரமில்லாத தனியாா் பள்ளிகள் மீது உடனே நடவடிக்கை கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழலையா் பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும். அப்போது அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த ஆய்வு விவரங்களை அறிக்கையாக தயாரித்து துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.