பள்ளி கல்வி தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வி ஆணையருக்கு ஆசிரியர்கள் கோரிக்கை
நூறு சதவீத தேர்ச்சி இலக்கை தவிர்த்தால், கல்வி தரத்தை மேம்படுத்தலாம் என, கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளிக்கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து, சமீபத்தில் கமிஷனர் சிஜிதாமஸ் வைத்யன், கோவையில் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தலா, 20 ஆசிரியர்கள் பங்கேற்றனர். எட்டு குழுக்களாக பிரித்து, ஆசிரியர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை, நுாறு சதவீத தேர்ச்சியை ஒழிக்க வேண்டுமென்பதாகவே இருந்தது.
ரிசல்ட் வெளியீட்டில் மாற்றம் கொண்டு வந்தாலும், 'ஆல்பாஸ்' முறையை, விடாமல் இறுக்கி பிடித்து கொண்டிருக்கிறது கல்வித்துறை.ரிசல்ட் வெளியானதும், கடந்தாண்டை ஒப்பிட்டு, ஒரு சதவீத தேர்ச்சி பின்னோக்கி சென்றாலும், உரிய ஆசிரியர்களிடம் விளக்கம் பெறப்படுகிறது. இதனால், சராசரியை தாண்டும் மாணவர்களை, அதிக மதிப்பெண்கள் பெற செய்வதற்கான திட்டங்களில், ஆசிரியர்களால் ஈடுபட முடிவதில்லை.தோல்வியை தழுவும் மாணவர்களை, 35 மதிப்பெண்கள் பெற செய்வதே, 90 சதவீத அரசுப்பள்ளிகளின் இலக்காக உள்ளது.
இதனால், கல்வித்தரத்தை மேம்படுத்துவது கேள்விக்குறியாகிவிடும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.இதற்கு, கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும் என, ஆசிரியர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நுாறு சதவீத தேர்ச்சி முறையை விளம்பரப்படுத்த தொடங்கிய பின்பு, கல்வியின் தரம் குறைந்துள்ளது. புதிய சிலபஸ் மாற்றப்பட்ட பின்பு, சராசரியை விட அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை கவனிக்க முடிவதில்லை. இதுகுறித்து, கமிஷனரிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளோம்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்