IIT விடுதிகளில் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க புதிய ஸ்பிரிங் தொழில்நுட்பம்
விடுதி அறையில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க புதிய வகை ஸ்பிரிங்கை விடுதி அறைகளில் உள்ள மின்விசிறியில் பொருத்த ஐஐடி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப்(20). இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் முதலாம் ஆண்டு எம்.ஏ மானுடவியல் படித்து வந்தார். இதற்கிடையே கடந்த நவம்பர் 8ம் தேதி விடுதி அறையில் பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக உள்ளது. இதையடுத்து விடுதிகளில் மாணவர்கள் தூக்குப்போட முடியாதபடி மின்விசிறிகளில்
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஐஐடி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறுகையில்,‘‘அனைத்து விடுதிகளிலும் ஸ்பிரிங் உடன்கூடிய மின்விசிறிகள் பொருத்தப்பட உள்ளது. அந்த ஸ்பிரிங் மின்விசிறியின் எடையை மட்டுமே தாங்கும். மாணவர்கள் தூக்குப்போட முயன்றால், அதிக எடை காரணமாக ஸ்பிரிங் விரிவடைந்து மின்விசிறி கீழ்நோக்கி வந்துவிடும். இதனால் மாணவர்கள் விடுதி அறையில் தூக்குபோடும் சம்பவங்கள் தவிர்க்கப்படும். இதற்காக ஐஐடி ஆய்வுக்குழு பிரத்யேக ஸ்பிரிங்கை தயாரித்துள்ளது. அடுத்த மாதம் தேர்வு முடிந்து மாணவர்கள் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றதும் விடுதியில் உள்ள மின்விசிறிகளில் பிரத்யோக ஸ்பிரிங் பொருத்தப்படும். தற்கொலை எண்ணத்தை தடுக்க மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க மனநல மருத்துவர்கள், நிபுணர்கள் கொண்ட சிறப்புக்குழுவும் ஐஐடி உருவாக்கப்பட உள்ளது’’