Breaking News

கணினி ஆசிரியர்களுக்கு பொதுத்தேர்வுக்கான பணிகள் வழங்கப்பட்டுள்ளன

பொது தேர்வு பணிகளை கவனிக்க, 32 மாவட்டங்களிலும், கணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வு நடத்தப் படுகிறது. தேர்வு பணிகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்வுக்கான மாணவர் விபரங்களை திரட்டுதல், தேர்வு மையம் அமைத்தல், வினாத்தாள் தயாரிப்பு, தேர்வுக்கான வெற்று விடைத்தாள் அச்சடித்தல், 'பார்கோடு' உருவாக்குவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளில், அரசு தேர்வு துறை பணியாளர்கள் மட்டுமே ஈடுபடுவது வழக்கம். ஆனால், அரசு தேர்வு துறை பணியாளர்கள் தரப்பில், ஆட்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்பட்டது.


எனவே, பள்ளி கல்வி துறையினருக்கு, தேர்வு பணிகள் கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளன. அதன்படி, 32 மாவட்டங்களுக்கும், கணினி ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்புகள் வழங்கப் பட்டுள்ளன. மாணவர்களின் விபரங்களை சேகரிக்கவும், அவற்றை கணினியில் பதிவு செய்யவும் வேண்டும் என, கணினி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இதில், 64 கணினி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இன்னும் பல்வேறு பணிகளுக்கு, பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கூடுதல் பணி வழங்க, தேர்வு துறை முடிவு செய்துள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.